6

  1.  ஏழ்மை

 

போற்றுதற்குரிய  சான்றோர்கள்,  பெரிய  மனிதர்கள்  பலரும்  தங்கள்  செல்வங்களைத்  துறந்து  ஏழ்மை  நிலையை  விரும்பி நாடியுள்ளனர். அது  தங்கள்  குறிக்கோளை  எட்டுவதற்குத்  துணை  புரியும்   என்று  பன்னெடுங்காலமாகவே  பலரும்  இவ்வாறு  செயல்பட்டுள்ளனர். இவ்வாறு  இருக்க, ஏழ்மை  நிலை  ஏன்  ஒரு  விரும்பத்  தகாத  ஒன்றாக  பெருந்தீமையாக  கருதப்படுகி

றது ? பெரும் சான்றோர்களால்   விரும்பி  ஏற்றுக்  கொள்ளப்பட்ட  ஏழ்மை  நிலை, வரப்பிரசாதமாக  கருதப்பட்ட  ஏழ்மை  நிலை  ஏனைய  மனித  குலத்திற்கு  ஏன் ஒரு  நோயாக,  ஒரு  துன்பமாக  காட்சியளிக்கின்றது ?

 

இதன்  விளக்கம்  மிகவும்  வெளிப்படையானது. முதல்  உதாரணத்தில்  ஏழ்மை  நிலை  என்பது  பொருள்  செல்வம் இன்மையை  குறிக்கின்றது. ஆனால்  அங்கே  அருள்  செல்வம்  நிறைந்து  வழிகின்றது. அவர்களது  ஏழ்மை  நிலையில்  தீங்கின்  சுவடைக்  கூட  காண  முடியாது. அவர்களது  பொருளற்ற  நிலை  இனிதாக  அழகாகத்  தோன்றும். செல்வச்  செழிப்பையும்  மதிப்பையும்  மரியாதையையும்  விட   உயர்ந்ததாக  சிறந்ததாகத்  தோன்றும். அந்த  சான்றோர்களது  வாழ்வு  முறையைக்  கண்டு  வியந்து ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள்  வாழ்விலும்   அதனைப்  பின்பற்றுகின்றனர். மற்றொரு  உதாரணத்தில்  நாம்  காணும்  பெரு  நகரங்களின்  ஏழ்மை  நிலை  எல்லாவிதமான  வெறுக்கத்தக்க தீயவைகளான  நா கூசும் வார்த்தைகள், குடி, போதை, அசுத்தம், சுறுசுறுப்பின்மை  அல்லது  சோம்பேறித்தனம் , நேர்மையின்மை, சட்டத்திற்குப்  புறம்பான  குற்றங்கள்  போன்றவைகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. எது  உண்மையான கொடுமை ? ஏழ்மை  நிலையா  அல்லது  பாவக்  குற்றங்களா ? இதற்கு  எந்த  மாற்றுக்  கருத்தும்  இல்லை. பாவக்  குற்றங்களே. இந்த  ஏழ்மை  நிலையிலிருந்து  இந்தக்  குற்றங்களை விலக்கி பார்க்கும் போது அவலட்சனமான ஒன்றாக இருந்ததிலிருந்து அழகான ஒன்றாக காட்சியளிக்கும்.   பெருந்தீமையாக  தோற்றமளிப்பதிலிருந்து  மாறி  பெரும்  நன்மைக்கு  ஒன்றுக்கு  மாற்றப்படக்கூடிய  ஒன்றாக  எளிதில்  தோன்றும்.

 

சீன  ஞானி  கன்பூஷியஸ்,  தன்னுடைய  செல்வச்  சிறப்புகள்  நிறைந்த  சீடர்களிடம் ;-    உண்பதற்கு சோறையும்  நீரையும்  மட்டுமே, உறைவதற்குக்  கூரை  வீடு மட்டுமே  கொண்டு  இருந்து  தன்  நிலை  குறித்து  தன்னிரக்கமோ  முணுமுணுப்போ  இன்றி  இருந்த  ஹென் – ஹீவீ  என்ற  சீடனைத்தான்  முன் மாதிரியாக  காட்டி விரும்பினார். பெரும்பாலானவர்களுக்கு  துயரத்தையும்  சோகத்தையும்  ஏற்படுத்தும்  ஏழ்மை  நிலை  ஹென் -ஹீவீக்கு   எந்தவித  அச்சத்தையோ  கலக்கத்தையோ  ஏற்படுத்தவில்லை .உயரிய   குணம்  கொண்ட  ஒருவனை  ஏழ்மை  நிலையால்  சிறுமைப் படுத்த முடியாது.  அவன்  மேலும்  உயர்வதற்கே  அது  துணை  புரியும். ஜொலிக்கும்  தங்க  வைர  நகைகளை  கருநீல  வண்ண  பின்புறத்தில்  வைத்தால்  அவை  மேலும்  ஜொலிப்பது  போல  உயரிய  குணம்  கொண்ட  ஹென் -ஹீவீக்கு  அது  மேலும்  சிறப்புச்  சேர்த்தது.

 

சமூக  சீர்திருத்தவாதிகள்  ஏழ்மை (வறுமை) நிலை  தான்  பாவச்செயல்களுக்கு   காரணம்  என்று  கருதுகிறார்கள். அதே  சீர்திருத்தவாதிகள்  செல்வந்தர்களின்      தீய ஒழுக்கத்திற்கும்,   அவர்களின் செல்வமே   காரணம்  என்கிறார்கள். எங்கே  தகுந்த காரணம்  இருக்கின்றதோ   அங்கே அதற்கு ஏற்ற விளைவு  ஏற்படும். சீர்திருத்தவாதிகளின்  கூற்று உண்மை என்றால்   செல்வச்செழிப்பின் காரணமாக தீய ஒழுக்கம் ஏற்படும். வறுமையின் காரணமான பாவச்செயல்களினால்  இழிநிலை ஏற்படும்.எல்லா செல்வந்தர்களும் ஒழுக்கம் கெட்டவர்களாகிவிடுவார்கள். எல்லா  ஏழைகளும்  இழி  நிலைக்கு  ஆளாக  வேண்டும்.

 

தீங்கு  இழைக்கும்  தன்மை  கொண்டவன்  எந்தச்  சூழ்நிலையிலும்  தீங்கி ழைப்பான் ;-  அவன்  ஏழையாக  இருந்தாலும் , பணக்காரனாக  இருந்தாலும், இரண்டிற்கும்  இடைப்பட்டு  இருந்தாலும். நற்செயல்கள்  புரிபவன்  எந்தச்  சூழ் நிலையிலும்   நற்செயல்களையே   புரிவான்.  சூழ்நிலை  தன்  உச்சநிலையை  எட்டும்போது  அது  அந்த  இதயத்தில்  அந்த  நாள்  வரை சந்தர்பத்தை எதிர்பாரத்து தங்கி  இருந்த    தீமையை தான் வெளிக்  கொண்டு வர முடியுமே   அன்றி  அந்த  உச்சகட்ட  சூழ்நிலையாலும்    தீமையை  (திடீரென்று)  உருவாக்கி செயல்படுத்த முடியாது.

 

தன்னுடைய   பொருளாதார  நிலை  குறித்து  திருப்தி  அடையாமல்  இருப்பதும், ஏழ்மை  நிலையும்  ஒன்றல்ல.  தலையாய  கடமைகளோ  பொறுப்புகளோ   ஏதுமின்றி  உயர்ந்த  வருமானத்தை  உடையவர்கள்  கூட  தங்களை  எழைகளாக  கருதிக்  கொள்கின்றனர்.  தங்கள்  துன்பத்திற்குத்  தாங்கள் ஏழைகளாக   இருப்பதுதான்  காரணம்  என்று  கருதுகின்றனர். ஆனால்  அவர்களின்  துன்பத்திற்கு  உண்மையான  காரணம்  அவர்களது  மன உணர்வுகள் தான். ஏழ்மை  நிலை  ஒருவனை  துக்கத்திற்கு  உள்ளாக்காது. ஆனால்  பணத்தின்  மீது  ஒருவன்  கொண்ட  தாகம்  துக்கத்தை  ஏற்படுத்தும்.ஏழ்மை  என்பது  பெரும்பாலும்  மனதிலே தான்   இருக்கின்றது. கையில்  உள்ள  பணத்தினால்  அல்ல. பேராசை  என்பது  மனத்தின்  ஏழ்மையைப்  பறை  சாற்றுகின்றது. பணத்தின்  மீது  கொண்ட  தாகம்  தணியாத வரை அவன்  தன்னை  ஏழையாகவே  கருதிக்கொள்வான். கருமியான  கோடீஸ்வரன்  சல்லிக்  காசில்லாத  ஏழையைப்  போன்றே  தன்னை  உணர்வான்.

மற்றொரு  புறத்தில் வறுமையில்  வாடும்  ஏழைகள்  தங்கள்  நிலை  குறித்து  வருத்தப்படாமல்  திருப்தியாக  வாழ்கின்றனர்.  சுத்தமற்ற சூழ்நிலையில், சீர்க்கேட்டிற்கு   இடையில் , ஒழுங்கின்மைக்கு  இடையில், சோம்பேறித்  தனத்தோடு, தீயவழி களில்  தன்  சுகத்தைத்  தேடுவதும் , தீய  எண்ணங்களில்  உழல்வதும், நா கூசும்  வார்த்தைகளை  எப்போதும்  பயன்படுத்திய  வண்ணம்  இருப்பதும், சுகாதாரமற்ற  சுற்றுப்புறத்தில்  வாழ்ந்து  வருத்தப்படாமல்  திருப்தியாக  வாழ்கிறேன்  என்று  கூறுவதும்  பெரும்  வருத்தத்தையும்  துக்கத்தையும்  ஏற்படுத்துகிறது. மனம்  உயர்வானவைகளைக்  குறித்த  அறிவின்மையால்  தாழ்வானவைகளை  கைப்பற்றிக்  கொண்டுள்ளது. அதற்கான  தீர்வும்  மனதிற்குள் தான்  இருக்கின்றது.

 

ஒவ்வொரு  தனி மனிதனும்  தன்னுள்  உற்று  நோக்கி வெளிச்சூழ் நிலையை  கண்டிப்பதை  நிந்திப்பதை  விடுத்து, அந்தச்  சூழ்நிலை  உருவாவதற்குக்  காரணமாக இருந்த   தன்னுள் உறையும்  எண்ணங்களை  சிறந்தவையாக  மாற்றிக்  கொள்ளட்டும். ஒருவன்  உளத்  தூய்மையோடு  விழிப்போடு  இருந்தால், அவன்  ஒருபோதும்  அசுத்தத்திற்கும்  சீர்கேட்டிற்கும்  இடையேயும்  வாழ்வதற்கு  விரும்பமாட்டான். அவன்  தன்  மனத்தை  ஒழுங்குபடுத்திய  காரணத்தால்  அவன்  வீடு  ஒழுங்காக  மாற்றத்திற்கு  உள்ளாகி  இருக்கும். அவன் தன்னைச்  சரிப்படுத்திக்  கொண்ட  காரணத்தால்  அவன்  முன்  தென்படும்  சுற்றுப்  புறமும்  சரியாகி  இருக்கின்றது  என்பதை  அவன்  உணர்ந்து  கொள்வான். (சூரியனைக்  கண்டவுடன்  மலரும்  தாமரைபோல).  ஏன்  அவனை  அடுத்து  உள்ளவர்களும்  உணர்ந்து  கொள்வார்கள்.அவனது  திருந்திய  இதயம்  அவனது  வாழ்க்கையை  திருத்தி  அமைக்கின்றது.

 

ஏழ்மை  நிலையில் , தங்களை  தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் ,இழிவுப் படுத்திக் கொள்ளாமல், சுய  கவுரவத்தோடு  பலர்  வாழ்கின்றனர். அவர்களில்  பலர்  ஏழையாக   வாழவே  விரும்புகின்றனர். அவர்கள்  தொழிலில்  சுறுசுறுப்பாக  வேலை  செய்கின்றனர். போதுமென்ற  மனத்தோடு  மகிழ்ச்சியாக  வாழ்வதைத்  தவிர  வேறு  எதையும்  அவர்கள்  விரும்புவது  இல்லை.  அந்த  நிலையில்  மன நிறைவை   காண முடியாதவர்கள்  தங்கள்  நிலையை  உயர்த்திக்  கொள்ள , குறிக்கோளை  அடைய  தங்கள்  ஏழ்மை  நிலையையே  முதல் படிக்கல்லாகக்  கொண்டு  தங்கள்  திறமைகளையும் ,  ஆற்றல்களையும்  முழுமையாக  வளர்த்துக்  கொள்ள வேண்டும். தன்னை  மேம்படுத்திக்  கொள்வதில்  ஆர்வமும், கடமையில்  கவனமும்  கொண்டு  வாழ்ந்தால்  அவர்கள்  அடைய  எண்ணிய  உயர் பொறுப்புகளோடு  கூடிய  வாழ்வை  அடைய முடியும்.

 

கடமையில்  கண்ணும்  கருத்துமாகச்  செயல்படுவது, உண்மையில்,  ஒருவனை ஏழ்மை  நிலையில்  இருந்து  மீட்பதோடு  நின்று  போய்  விடுவதல்ல. அதுதான்  செல்வத்திற்கும்,  செல்வாக்கிற்கும், நிலையான மகிழ்ச்சிக்கும் மட்டுமல்ல,  குற்றம்  குறைகளைக்  களைந்து அவன் தன்னை  முழுமைப்படுத்திக்  கொள்வதற்கும்  அழைத்துச்  செல்லும்  ராஜபாதையாகும். இந்த  ஒன்றை    ஆழமாய்  உணர்ந்து  கொண்டால்  வாழ்வின்  அனைத்து  உயர்ந்தவைகளுக்கும்  சிறந்தவைகளுக்கும்  அதுதான்  காரணம்  என்பதை  விளங்கிக்  கொள்ளலாம்.

கடமையில்  கண்ணும்  கருத்துமாகச்  செயல்படுவது என்பது ஊக்கம், ஆர்வம், செய்யும்  வேலையில் சிதறாத  ஒருமித்த  கவனம் ,  குறிக்கோள், துணிவு,  நம்பிக்கை, மன உறுதி, தன்னம்பிக்கை, பெருந்தன்மைக்கு  அடையாளமான  தன்னை  விட்டுக்  கொடுக்கும்  தன்மை என  அனைத்தையும்  உள்ளடக்கியது ஆகும்.  ஒரு  துறையில்  வெற்றி  பெற்றவரிடம்  அவர்  வெற்றியின்  ரகசியம்  என்னவென்று  கேட்கப்பட்டது. அதற்கு  அவர்  அளித்த  பதில், விடியும்  முன்பே  எழுந்திருப்பதும்  தன்  தொழிலில்  மட்டுமே  கவனத்தைச்  செலுத்துவதுமாகும்  என்று  கூறினார். மற்றவர்களது  கடமையில்  தலையிடாமல்  தன்னுடைய  கடமையில்  முழு  கவனத்தை  செலுத்துகிறவனிடம்  வெற்றிகளும்  நன்மதிப்பும், தன்பால்  பிறரை  ஈர்க்கும்  தன்மையும்  தேடி  வரும்.

 

இங்கே  குறுக்கிடலாம்,  வழக்கமாக  குறுக்கிடவும்  படுகிறது. ஏழ்மையில் உழலும்  பெரும்பாலானவர்கள்  தொழிற்சாலைகளிலும் , பட்டறைகளிலும்  பணி  புரியும்  தொழிலாளிகள். அவர்கள்  தங்களை  ஒரு  சிறந்த பணிக்குத் தயார்படுத் திக்  கொள்ள  நேரமோ  வாய்ப்போ  இல்லை  என்று. இது  தவறானதாகும். .நேரமும்  வாய்ப்பும் எல்லோருக்கும்  எப்போதும்  பொதுவானதாகும்.  மேலே  குறிப்பிடப்பட்டுள்ள  ஏழைகள், தங்கள்  பொருளாதார  நிலையில்  மன  நிறைவு  கொண்டவர்கள்.  தங்கள்   கடமைகளை  சரிவரச்  செய்து  தெளிவான  நிலையில்  மகிழ்ச்சியாக  தங்கள்  வீடுகளில்  வாழட்டும்.

தங்கள்   பொருளாதார  நிலையில்  திருப்தி  கொள்ளாதவர்கள் ,இப்பொழுது   இருக்கும்  நிலையை விட  உயர்ந்த  பொறுப்புகளை  ஏற்று  நிறைவேற்ற முடியும்  என்று  நினைப்பவர்கள்  தங்களுக்குக்  கிடைத்த  நேரத்தில்  தங்களைத்  தயார் படுத்திக் கொள்ள வேண்டும். கடுமையான  உடல்  உழைப்பாளிகளான  ஏழைகளே  மற்றவர்களை  விட, தங்களுக்குக்  கிடைக்கப்  பெற்ற  நேரத்தையும்  சக்தியையும்  வீணடிக்கா  வண்ணம்  பயன்படுத்திக்  கொள்ள  வேண்டிய நிலையில் உள்ளனர். தன்னுடைய  ஏழ்மை  நிலையை  தகர்த்து  எறிந்து  வெளிவரத்  துடிக்கும்  இளைஞன்  தன்  நேரத்தையும்  சக்தியையும்  தேவையின்றி வீணடிக்கும்  குடி, புகையிலை, மற்றும்  பிற  போதைப் பொருட்கள், பாலியல்  குற்றங்கள், பின்  இரவு  வரை இசையரங்குகள், கிளப்புகள்,    சீட்டாட்டங்கள்  என்று  துளியும்  நேரத்தை  வீணடிக்கக் கூடாது. தனக்கு  கிடைக்கப்  பெற்ற  நேரத்தை  தான்  விரும்பும்  அடுத்த  கட்டத்தில்  தன்னை  நிலை  நிறுத்திக்  கொள்வதற்கு , தகுதி  பெறுவதற்குத்  தேவையான  திறமைகளையும்,  நுணுக்கங்களையும்  கல்வியையும்  கற்க  வேண்டும்.

 

இந்த  முறையைப்  பின் பற்றி  பலர்   பெயரும் புகழும் பெற்று பெரிய மனிதர்களாகி  உள்ளனர்  என்பதை  வரலாற்றைப்  பார்க்கும் போது  உணர்ந்து  கொள்ளலாம். அந்தப்  பெரிய  மனிதர்களில்  சிலர், வறுமைக் கோட்டின்  கொடிய நிலையிலிருந்து  தங்களின் உழைப்பால்   மிக  உயரிய  சிகரத்தை  அடைந்தவர்கள். தேவை  ஏற்படும்  நேரம் தான்  வாய்ப்புகளை  ஏற்படுத்திக்  கொள்ள , உருவாக்கிக்  கொள்ள  வேண்டிய  நேரம்  , உ,ருவாகும் நேரமும் அது தான் என்று  நிரூபணமாகின்கிறது. தேவை  ஏற்படும்  நேரத்தில்  வாய்ப்புகள்  கிடைக்காது என்று சிலர்  கற்பனையில் முடிவு  செய்து  அறிவிப்பது   உண்மையல்ல. ஏழ்மை  கொடிதாக  இருக்கும்போது  அதன் பிடியில்  இருந்து  மீண்டு  சாதிக்கத்  துடிப்பவர்களின்  முயற்சியின்  பலன் பல  மடங்காக  அதிகரிக்கும்.

 

ஏழ்மை தீங்கை விளைவிக்க கூடியது அல்லது விளைவிக்க கூடியது அல்ல  என்பது அதில் வாழ்பவர்களின் குணநலனையும் மனநிலையையும் பொறுத்ததே.செல்வமும் தீங்கானதா தீங்கற்றதா என்பதும் அதைப் போன்றதே. டால்ஸ்டாய்  தன்  செல்வம்  தன்னை  ஒரு  எல்லையை  மீற  அனுமதிக்காததால்  ஏழ்மை  நிலைக்கு  ஏங்கினார். குற்றங்களும் எவ்விடத் தில்   நிகழ்ந்தாலும் அவை  குற்றமே. அந்தக்  குற்றமானது  அதை  மேற்கொண்ட  தனி  மனிதனையும்  இழிவுபடுத்துகிறது. அது  நடைபெற்ற  சமூகத்தையும்  பாதிப்புக்கு  உள்ளாக்குகின்றது. ஏழ்மை  குறித்து  அலசி  ஆராய்ந்தால் அது நம்மை  தனி   மனிதனிடம் , அவன்  இதயத்திடமே  அழைத்துச்  செல்லும். நம்  சமூக  சீர்  திருத்தவாதிகள்  செல்வந்தர்களைக்  கண்டனம்  செய்வது  போல  குற்றங்களைக்  கண்டனம்  செய்தால், குறைவான  ஊதியம்  வழங்குவதை  ஒழிக்க  நினைப்பது  போல  தவறாக  வாழும்  நிலையை  ஒழிக்க  நினைத்தால், நாகரிகம்  உச்சத்தை  எட்டிய  இந்தக்  காலத்திலும்  கரும்புள்ளியாக  இருக்கின்ற  இவ்வறுமையை  ஒழிக்க  குரல்  கொடுத்தவர்கள்  ஆவார்கள்.

 

வறுமை  முற்றிலுமாக  ஒழிவதற்கு  முன்  மனித  இதயம் அந்த நிகழ்வில்  பல  மாற்றங்களுக்கு  உள்ளாகி  இருக்கும். மனித  இதயமானது  பேராசையையும்  தன்னலத்தையும்  துடைத்து  எறிந்து  இருக்கும். குடி,  போதை,  அசுத்தம், சோம்பேறித்தனம், புலன் இன்ப  சுகங்களில்  மூழ்கி  திளைத்தல்  ஆகியவை  பூமியில்  இருந்தே  விரட்டப்பட்டு  இருக்கும்.  தம்  ஏழ்மை  நிலையோ, செல்வச்  செழிப்பு  நிலையோ  இரண்டையும்  குறித்து  எவருக்கும்  ஆர்வம்  இருக்காது. எல்லோரும்  தங்கள்  பொறுப்புகளையும்  கடமைகளையும்  இதுவரை  அனுபவித்திராத  மகிழ்ச்சியோடும்  ஈடுப்பாட்டோடும்  ( உள்ளத்   தூய்மை  கொண்டவர்கள்  இம் மகிழ்ச்சியை முன்பே  உணர்ந்திருப்பார்கள்.) முழுதாக நிறைவேற்றி   தங்கள்  உழைப்பின் ஊதியத்தில்  தன் மானத்தோடும்  மன நிம்மதியோடும்  வாழ்வார்கள்.

Share This Book