4

  1. பழக்கவழக்கங்கள் , அவற்றிற்கு அடிமையாவதும் மீள்வதும்

 

மனிதன்   தான்   கடைப்பிடிக்கும்   பழக்கங்களுக்கு  கட்டுப்பட்டவன். பின்பு  எவ்வாறு  சுதந்திரமானவன்  என்று  கூற  முடியும்?  வாழ்வையோ  வாழ்வின்  நீதி, நியாய  அறக் கோட்பாடுகளையோ மனிதன்  உருவாக்கவில்லை. இந்த  நீதி  நியாய  அறக்கோட்பாடுகள்  வாழ்வில்  எவ்வாறு செயல்படுகின்றன  என்று  விளங்கிக்  கொள்ள முடியும். அவற்றை  முழு  மனத்தோடு  ஏற்றுத்  தன்  வாழ்வில்  ஒழுக்கமாக  ஆக்கிக்  கொள்ளலாம்.  சமூக  வாழ்விற்குப்  பயன்படும்  சட்ட  திட்டங்களை  மனிதனால்  உருவாக்க  இயலும். வாழ்வை  கட்டுப்படுத்தும்  சட்ட  திட்டங்களை   ஒருபோதும்  அவனால்  உருவாக்க  முடியாது.வாழ்வின்  நுட்பமான  நீதி  நியாயங்களை பகுத்து  ஆராய்ந்து  தேர்ந்தெடுத்துக்  கொள்ளலாம். அந்த  நுட்பமான   பிரபஞ்ச  நீதியை  எவராலும்  உருவாக்க  முடியாது.  எவராலும்  அழிக்கவும்  முடியாது. மனிதன்  அவைகளை  உருவாக்கி  செயல்படுத்தவில்லை. அவை  செயல்படும்  விதத்தை  உணர்ந்து  பயன்பெறுகிறான் . பாதுகாப்பு  அடைகிறான். அந்த  பிரபஞ்ச  நீதியை  உணராமல்  இருப்பதுதான்  வாழ்வின்  பெருந்துன்பத்திற்கு  ஆணிவேர். அவற்றை உணர  மறுப்பது  அறியாமையையும்  அடிமைத்தனத்தையும்  பறைசாற்றுகிறது. யார்  சுதந்திரமானவன்? நாட்டின்  சட்ட  திட்டங்களை  ஏற்று  நடக்காத  திருடனா  அல்லது  அவற்றை  ஏற்று  நடக்கும்  நியாயமான  குடிமகனா ? அதேபோல் யார்  சுதந்திரமானவன்? ,மனம்  போன  போக்கில்  அவை  நன்மையா  தீமையா  என்று  ஆராயாமல்  வாழ  முற்படும்  முட்டாளா  அல்லது  ஆராய்ந்து  நன்மையைத்  தேர்ந்தெடுத்து  வாழ முற்படும் புத்திசாலியா ?

இயற்கையாகவே,  மனிதன்  பழக்கங்களுக்கு  ஆட்பட்டவன் . இதை  அவன்  ஒருபோதும்  மாற்ற முடியாது. ஆனால்  அவன்  பழக்கங்களை  அவனால்  மாற்றிக்  கொள்ள  முடியும். அவனைக்  கட்டுப் படுத்தும்  இயற்கை விதிகளை அவன் மாற்றி வாழ  முடியாது. ஆனால் அந்த விதிகளுக்கு தக்கவாறு அவன்  தன்னை  மாற்றிக் கொள்ளலாம்.  எந்த  மனிதனும்  பூமியின்  புவிஈர்ப்பு  விதியை மாற்றுதற்கு  முற்படுவதில்லை. அது  செயல்படும்  விதத்தை  உணர்ந்து  அதற்கு  ஏற்றவாறு  நடக்கிறான். மதிற்சுவரில்  ஏறி  அவன்  நடப்பது  இல்லை. தரையின்  மீதோ  தட்டையான  பாதையிலோ  தான்  நடக்கிறான். உயரே  இருந்து  பாதுகாப்பு  சாதனங்கள்  இன்றி  குதிப்பதும்  இல்லை.

 

புவிஈர்ப்பு  விதியை  எவ்வாறு  மனிதனால்  புறந்தள்ள  முடியாதோ  அதைப்  போலவே  தன்  பழக்கங்களின்  வசமானவன் என்ற  விதியையும்  அவனால்  புறந்தள்ள  முடியாது. தான்  பழக்கங்களின்  வசமானவன்  என்ற  விதியை  உணர்ந்து  தன்  பழக்கங்களைத்  தேர்ந்தெடுத்துக்  கடைப்பிடித்து  அந்த  விதியை  தனக்குச்  சாதகமாகவோ,பாதகமாகவோ  மாற்றிக்  கொள்ளலாம். ஐம்புலன்களுக்குப் புலப்படும்  ஆற்றலையும்  அந்த  ஆற்றல்  உருவாவதற்கான  காரணத்தையும்  அறிந்து  அதைப்  பயன்படுத்த  விழைபவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் கண்டு பிடிப்பாளர்களாகவும்  ஆகின்றனர்.

ஐம்புலன்களுக்கு  புலப்படாத  ஆற்றலை  உணர்ந்து  கொள்பவர்கள்  அறிந்து  கொள்பவர்கள்   மெய்யறிவு பெற்றவர்களாகின்றனர். தீய  மனிதன்  தீய  பழக்கங்களுக்கு  அடிமையானவன். நல்ல மனிதனோ  நற்பழக்கங்களை  கடைபிடிப்பவன். மீண்டும்  நினைவில் கொள்ளுங்கள், பழக்கங்கள் செயல்படுகின்ற  விதியை அவனால் மாற்ற முடியாது, அது இவ்வாறு செயல்பட வேண்டும் என்று கட்டளை இட முடியாது , ஆனால் அந்த விதியின் வலிமை உணர்ந்து நல் ஒழுக்கங்களை கடைப்பிடித்து பழக்கங்களாக ஆக்கிக் கொண்டுள்ளான். அரியபெரு  நற்செயல்களை  அவன்  புரிவதற்கு  ஒவ்வொரு  முறையும்  கட்டளையையோ , ஆணைகளையோ   பிறப்பித்துக் கொண்டு  அவற்றை  சிரமேற்றுச் செயல்படுத்துவதில்லை. நற்பழக்கங்களைத்  தொடர்ந்து  கடைப்பிடித்தால்  அவற்றின்  வசமாகி  நற்செயல்கள்  புரிவது  அவனுக்கு  எளிதாக  அமைகிறது.

தீய  பழக்கங்களையும்  தீய  எண்ணங்களையும்  கொண்டவன்  தீயவனாகிறான். நற்பழக்கங்களையும்  நல்  எண்ணங்களையும் கொண்டவன்  நல்லவனாகிறான். தீயவற்றை  விட்டொழிந்து  நல்லனவற்றை  கடைப்பிடிக்கும்  போது  தீயவன்  நன்மையானவனாக  உருமாறுகிறான். அவன் விதியை  மாற்றவில்லை. தன்னை  மாற்றிக் கொள்கிறான். தன் எண்ணங்களுக்குத்  தன்  பழக்கங்களுக்கு  தான்  வசமானவன்  என்ற  உண்மையை  உணர்ந்து  அதற்கேற்ப  தன்னை  வடிவமைத்து  கொள்கிறான். தன்  சுயநல  இழிநிலைக்கு  அழைத்துச்  செல்லும் ,தூண்டும் ஆசைகளை, செயல்களைப்  புறந்தள்ளி  உயரிய  கோட்பாடுகளுக்குத் தலை வணங்குகின்றான் .மேலான  கோட்பாடுகளுக்குத்  தலை வணங்கியதால்  கீழானவற்றைப்  புறந்தள்ளும்  ஆற்றல்  அவனிடம்  ததும்பி  வழிகிறது. தான்  பழக்கங்களின்  வசமானவன்  என்ற  விதி  மாற்றப்படவில்லை. தன்  பழக்கங்களை  மாற்றிக் கொண்டு அந்த  விதியை  தனக்கு  சாதகமாகப்  பயன்படுத்திக் கொண்டுள்ளான்.

பழக்கம்  என்பது  மீண்டும்  மீண்டும்  தொடர்வது. மனிதன்  முன்பு  எண்ணிய  எண்ணங்களை, முன்பு செய்த  செயல்களை மீண்டும் மீண்டும்  தொடர்கிறான். அவை தன்னுள்  ஒன்று  கலந்து விடும் வரை , தன்னில்  ஒரு பகுதியாக  மாறும் வரை , திறமை  என்பது நிலைபெற்று விட்ட பழக்கமாகும். மனத்தில்  படிப்படியாக  படிந்ததே  வெளியே படிப்படியாக  உருவாகிறது. மனிதனது  இன்றைய நிலை  என்பது, தான்  கொண்ட  எண்ணங்களையும்  செயல்களையும்  பல லட்சம் முறை தொடர்ந்ததே ஆகும்.அவன்  ஏற்கனவே  முழு  முதலாக  உருவாக்கப்பட்டு  விடப்பட்டவன்  அல்ல. தொடர்ந்து  உருவாகிக்  கொண்டே  இருப்பவன். அவனது  குணத்தைத்  தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு  அவனிடமே  கொடுக்கப்பட்டுள்ளது. அவன்  தேர்ந்தெடுத்துக்  கடைப்பிடிக்கும்  எண்ணங்களும், செயல்களும் அவனது  பழக்கங்களாக  அவனாகவே  மாறிவிடுகின்றன.

 

இவ்வாறு  ஒவ்வொரு  மனிதனும்  தான்  மேற்கொண்ட  எண்ணங்களின், செயல்களின்  வடிவமாகத்  திகழ்கிறான். தன்னை  அறியாமலே அவன்  முயற்சியின்றி  அவனுள்  இருந்து  வெளிப்படும்  அவனது  குணங்கள் , இயல்புகள்  எல்லாம் நெடுங்காலமாக  அவன் தொடர்ந்து  கடைப்பிடித்த  எண்ணங்களும்  செயல்களுமே  ஆகும். பழக்கங்களின்  இயற்கை விதியே  அதுதான். அது தொடர்ந்து  பின் பற்றப்படுவதால்  அவனது  பெரு முயற்சி ஏதுமின்றி இயல்பாகவே  மாறி  வெளிப் படும். இறுதியில்  அவனே  தடுக்க  நினைத்தாலும் முற்சித்தாலும்  அதையும்  மீறி வெளிப்படும். நற்பழக்கங்கள் , தீய பழக்கங்கள்  இரண்டுக்குமே  இவை  பொருந்தும். அவை  தீயனவாக  இருந்தால்  கெட்டவனாக,வஞ்சகனாக  காட்சியளிக்கிறான். நல்லவையாக  இருந்தால்  நல்லவனாக  காட்சியளிக்கிறான்.

எல்லா  மனிதர்களும் , தங்கள்  பழக்கங்களின் கட்டுப்பாட்டிலேயே  வாழ்கிறார்கள். இனியும் தொடர்ந்து  அவ்வாறே  வாழ்வார்கள். அவை  நற்பழக்கமோ  தீய பழக்கமோ (அது இங்கு  பொருள் அல்ல). அவர்கள்  மீண்டும் மீண்டும்  எண்ணும்  எண்ணங்களும்  கைக்கொள்ளும்  செயல்களும்  அவர்களை  அழைத்துச்  செல்லும்  வழிகாட்டிகளாகும்.  நல்லறிவு  உடையவர்கள்  இதை  உணர்ந்து  நற்பழக்கங்களைக்  கடைப்பிடிக்கின்றனர். அதன்  விளைவாக  இன்பத்தையும்  மகிழ்ச்சியையும்  சுதந்திரத்தையும்  அனுபவிக்கின்றனர். இதை  உணராமல்  தீய  பழக்கங்களைத் தொடர்ந்த  வண்ணம்  வாழ்பவர்கள்  துன்பத்திலும்  அடிமைத் தனத்திலும்  உழல்கின்றனர்.

 

பழக்கங்களின்  இந்த  நியதி  நன்மையின்  பொருட்டே . இது தீய  பழக்கங்களை  மேற்கொள்பவர்களை  அடிமைச்  சங்கிலியில்  பூட்டியும் , நற்பழக்கங்களை  மேற்கொள்பவர்களை நல்  திசையிலும்  நிலைபெறச்  செய்து  விடுகிறது. ஒவ்வொரு  முறையும்  ஆராய்ந்து  ஆராய்ந்து  தேர்ந்தேடுப்பதற்குத்  தேவையின்றி  அவர்கள்  உணர்வில்  ஒன்றிவிட்டபடியால்  அவர்களையும்  அறியாமல்  உள்ளுணர்வின்  வழிகாட்டுதலால்  அரும்பெரும்  செயல்களை  எந்தவிதப் பெருமுயற்சியும் இன்றி   முழு  சுதந்திரத்துடன் , முழு  மனத்துடன், மகிழ்ச்சியுடன்  அவர்களால்  புரிய  முடிகிறது.

 

வாழ்வின்  இந்தத்  தன்னாலேயே  இயங்கும் தன்மையை {Automatism ,தானியங்கி  தன்மையை  /  தன்னிச்சை  செயல்களை ( தன்னையறியாமல்  செயல்படுவது  போலத்  தோன்றும்) }  நோக்குபவர்கள்,  மனிதர்களுக்கு  விதிக்கப்பட்டுள்ள  விதியை  அவர்களால்  மீற  முடியாது. விடாது  முயற்சி  செய்வது  வீண் வேலை  என்று  கருதுகின்றனர். ஒருவன்  பிறக்கும்போதே  நல்லவனாகவோ  தீயவனாகவோ  பிறந்துள்ளான்  என்றும், கண்ணுக்குப்  புலப்படாத  சக்திகளால்  ஆட்டுவிக்கப்படும்  பொம்மை  என்றும்  கருதுகின்றனர்.

 

பலவித  சக்திகளினால் ஆட்டுவிக்கப்படும்  கருவிதான் மனிதன்  என்பது  ஓரளவு  உண்மைதான். இன்னும்  தெளிவாகக்  கூற  வேண்டுமானால்  அந்தப்  பல வித  சக்திகளை  உருவாக்கியவனும்  அதே  மனிதன்தான். அவை  எந்த  இலக்குமின்றி  சுற்றித்  திரிவன  அல்ல. அவற்றை  அவனால்  வழி நடத்த முடியும். புதிய  பாதைக்கு  அழைத்துச்  செல்ல முடியும். ஒரு  வார்த்தையில்  கூற  வேண்டுமானால்  தேர்ந்தெடுத்து  மாற்றி  அமைத்துத்  தன்னை  தயார்படுத்திக்  கொள்ள  முடியும்.

மனிதன் அவனுக்கே  உரிய  குண நலன்களோடும்  பண்புகளோடும்  பிறந்துள்ளான்  என்பது உண்மைதான்  என்றாலும்  அந்த  குண நலன்களும்  பண்புகளும்  எண்ணிலடங்கா  பிறவிகளினால்  அவன்  மேற்கொண்ட  எண்ணங்களின்  முயற்சிகளின்  விளைவாக  அவனுக்கு  இப்பிறவியில்  அமைந்துள்ளது. அந்தக்  குண நலன்கள் இந்தப்  பிறவியில் அவனுக்கு  நேரும்  அனுபவங்களால்  மேலும்  மாற்றங்களுக்கு உள்ளாகும்..

தீய குணங்களையோ  அல்லது  தீய  பழக்கங்களையோ கூர்ந்து  ஆராய்ந்தால்  அவை  இரண்டுமே  ஒன்றுதான். ஒருவன்  அத்தீயவைகளை கைவிட  முடியாமல்  அவற்றின்  பிடியில்  சிக்கித்  தவித்து எத்தகைய  துயரங்களை அனுபவித்தாலும் அவன்  மனநலம்  பாதிப்புக்கு  உள்ளாகாதவரை அவன்  அவற்றின் பிடியிலிருந்து  விடுபடத்  துணிந்தால் அவனுக்குப்  பல  வாய்ப்புகள்  காத்திருக்கின்றன. தீய  குணத்திற்கு  எதிர் மறையான  நற்குணங்களைப்  பயில வேண்டும். முன்பு  தீய  குணங்கள்  அவனை ஆட்கொண்டும் இடையறாத  துன்பத்திற்கும்  துக்கத்திற்கும்  காரணமாக  இருந்ததைப்  போல் , நாளடைவில்  நற்குணங்கள், நற்பழக்கங்கள்  அவனை  ஆட்கொண்டு  வற்றாத மகிழ்ச்சிக்கு  ஊற்றாக  இருக்கும். அந் நற்பழக்கங்களை  அவன்  கைவிடுவதற்கு  அவனுக்குத்  தேவையோ  விருப்பமோ  ஏற்படாது..

 

தன்னுள்  உருவாக்கிக்கொண்ட  பழக்கங்களை மனிதனால்  கைவிடவும்  முடியும்; சீரமைத்துக்  கொள்ளவும்  முடியும்; வேறொன்றை  உருவாக்கிக் கொள்ளவும்  முடியும்.அவனுக்கு வேண்டியது அதற்கான  மன  உறுதியும்  முயற்சியும்  விருப்பமுமே. பழக்கங்கள்  தனக்கு  இன்பம்  தருகின்ற வரை அவற்றை  கைவிட  வேண்டும்  என்கிற  எண்ணம்  அவனுக்கு  ஏற்படாது. அவை  எப்பொழுது  துன்பத்தைத் தர தொடங்குகிறதோ  அப்பொழுதுதான்  அதிலிருந்து  மீள்வதற்கு  ஒரு  வழியைத்  தேடுவான்.               எந்த  மனிதனும்  உதவிகள்  அவனை  எட்டா  வண்ணம் எங்கும்  விட்டுவிடப்பட  வில்லை. எந்த  விதியின்  கீழ்  தான்  அடிமை  வயப்பட்டானோ  அதே  விதியின்  கீழ்  தன்னை அவன்  விடுவித்துக்  கொள்ளலாம். இதை  உணர்ந்து  கொள்ள முதலில்   அவன்  இதைச்  செயல்படுத்த  வேண்டும். தீர்க்கமாக  முடிவெடுத்து  எப்பாடுபட்டாவது  தன்னை  தாழ்நிலைக்கு  அழைத்துச்  செல்லும்  எண்ணங்களையும்  பழக்கங்களையும்  உதறித் தள்ள வேண்டும். இயன்ற வரை  முயற்சி  செய்து  சிறந்த  எண்ணங்களையும்  நற் பழக்கங்களையும்  கைக்கொள்ள  வேண்டும். இதை  அவன்  உடனே  சாதிக்க  முடியாமல்  போகலாம். அதற்கு  ஒரு  நாளோ, ஒரு  வாரமோ, ஒரு மாதமோ, ஒரு  ஆண்டோ  அல்லது  ஐந்து  ஆண்டுகள்  என்றாலும்  அவன்  மனம்  கலங்கி  முயற்சியைக்  கைவிடக்  கூடாது. பழைய  பழக்கங்கள்  உடைவதற்கும்  புதுப்  பழக்கங்கள்  ஏற்படுவதற்கும்  காலம்  தேவைப்படுகிறது. ஆனால்  பழக்கத்தின்  நியதி  மாற்ற  முடியாதது. தவிர்க்க  முடியாதது.

இடைவிடாத  முயற்சியும்  மனம் தளராத  பொறுமையும்  முயற்சி  கைகூடும்  என்று  உறுதியுடனிருந்தால்  வெற்றி  தேடி  வரும்.

 

ஒரு  இடையூறான  சூழ்நிலை , எதிர்மறையான  சிந்தனை  இவைகளே மனதில்  ஆழமாக  வேரூன்றும்போது , ஒரு  இனிய  சூழ்நிலை, நேர்மறையான   சிந்தனைகளை  கைக்கொண்டால்  அவை  இன்னும்  ஆழமாக  வேரூன்றி  மனதில்  பதியும். தன்னுடைய தவறுகளையும்  தன்  துக்கத்திற்குக்  காரணமான  தன்  குணங்களையும்  தன்னிடமிருந்து  நீக்குவதற்கு  சக்தியில்லை  என்று  நினைத்தால் , என்னால்  முடியாது  என்று  நினைத்தால், அவனால்  முடியாது. என்னால்  முடியாது  என்கிற  எண்ணமானது  மனத்தின்  ஆழத்திலிருந்து  களையப்பட  வேண்டும். செல்ல  வேண்டிய  பாதையில்  குறுக்கே  விழுந்த  மிக பெரிய தடைக்கல்  அந்த  கெட்ட  பழக்கம்  என்று  கூறக் கூடாது. கெட்ட  பழக்கத்தை  முறியடிக்க  முடியாது  என்கின்ற  எண்ணம்  தான் அந்தப்  மிக பெரிய தடைக்கல்   என்று  கூறுவது தான் சரி.

 

தன்னால்  ஒரு  கெட்ட  பழக்கத்திலிருந்து  மீள முடியாது  என்று எண்ணும்  வரை  அவன்  எவ்வாறு  அதிலிருந்து  மீள முடியும் . தன்னால்  அதிலிருந்து  மீள  முடியும்  என்று  எண்ணும்போது  அவனை  தடுக்கக்  கூடிய  சக்திதான்  எது ?             என்னால்  என்  தீய  பழக்கங்களிலிருந்து , தீய  இயல்புகளிலிருந்து  மீள  முடியாது  என்கிற  எண்ணம்  மனதில்  ஆதிக்கம்  செலுத்திக்  கொண்டிருக்கும் வரை  அவன்  அத்தீய  பழக்கங்களுக்கு  அடிமையாக  இருக்கிறான். அவ்வெண்ணத்தை  ஆழமாக  முழுதும் எல்லா திரைகளையும் விலக்கி  ஆராய்ந்தால்  அது  அவன்  தீங்கின்  பால்  கொண்ட  நம்பிக்கை,  நன்மையின்  பால்  கொண்ட  அவ நம்பிக்கை  என்று  விளங்கும். தன்னால்  தன்  தீய  பழக்கங்களிலிருந்து , தீய  எண்ணங்களிலிருந்து  மீள  முடியாது  என்று  நினைத்தால்  அவன்  தீமைக்கு  தலை வணங்குகிறான். நன்மையை  நிராகரிக்கிறான்  என்று  அர்த்தம்.

 

தீங்கின்பால்  நம்பிக்கை  கொண்டால்  அடிமையாய்  சிதைப்படுவான். நன்மையின்  மேல்  நம்பிக்கை  கொண்டால்  அவன்  தன்னை  விடுவித்துக்  கொள்ளலாம். ஒரு திருந்திய உள்ளம் – திருந்திய  மனோபாவம்  குணங்களை, பழக்கங்களை  திருத்தி வாழ்க்கையை  மாற்றி  அமைக்கும். தன்னை  விடுவிக்கக் கூடிய  ஒரே  மனிதன்  அவன்   ஒருவன் மட்டுமே.  தன்  வீழ்ச்சியை  ஏற்படுத்திக்  கொண்டவனும்  அவன் தான். அவனே தான் தன்னுடைய  மீட்சியையும்  உருவாக்கிக்  கொள்ள வேண்டும் .மனிதன்  பல  யுகங்களாக  இன்று  வரை  தொடர்ந்து  காத்துக்  கொண்டே  இருக்கிறான்,  தன்னை  மீட்பதற்கு  எவரேனும்  வருவார்களா  என்று. ஆனால்  எவரும்  வராமல் சிக்கித்  தவிக்கிறான்.  பேராற்றல் மிகு  மீட்பன்  அவனுள்ளேதான்  இருக்கிறான். அந்த  மீட்பன் தான்  உண்மையின்  மெய்ப்  பொருளின்  மெய்யறிவின்  சாரம். நன்மையின்  சாரம். அந்த  மீட்கும்  சக்தியானது  எப்பொழுதும்  நற் பழக்கங்களிலும் , நல்  எண்ணங்களிலும்  நற்  செயல்களிலும்  அவற்றின்  விளைவுகளிலும் குடி கொண்டிருக்கிறது.

 

 

மனிதனுடைய  தவறான  எண்ணங்களே   அவனை அடிமைப்படுத்துகின்றன. அவன்  வெளியே  இருக்கும்  எந்த ஓன்றும்    அவனை  அடிமைப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. இதை  உணர்ந்து  அவன்  தன்  தவறான  எண்ணங்களை  விடுத்து  தன்னை  விடுவித்துக்  கொள்ளலாம்.  முதலாவதும்  முக்கியமானதுமாக

என்னால்   முன்னேற  முடியாது.

 

என்  தீய  பழக்கங்களிலிருந்து  என்னால்  மீள  முடியாது.

 

என்  இயல்பை  என்னால்  மாற்றிக்  கொள்ள  முடியாது.

 

சுய   கட்டுப்பாடுடன்  என்னை  நான்  நிர்வகித்துக்  கொள்ள  முடியாது.

 

என்  பாவங்களிலிருந்து  என்னால்  விடுபட  முடியாது.

 

என்று  இது போன்ற  அடிமை  வயப்படுத்தும்  எண்ணங்களை  விட்டொழித்தாக  வேண்டும் .

இந்த ”முடியாது” என்கிற எண்ணம் அவன் மனதில் தான் படிந்துள்ளது.வேறு எங்கும் இல்லை.

 

இவை  போன்ற  முடியாது  என்னும்  எதிர்மறை எண்ணங்கள்   களைந்து  எறியப்பட்டு  அவற்றினிடத்தில்  முடியும்  என்னும்  நேர்மறை  எண்ணங்கள்  விதைக்கப்பட்டு, நடப்பட்டு  நீரூற்றி  வேலியிட்டுப்  பாதுகாத்து அவை  வேர்விட்டு  வலிய  மரமாகும்  வரை  வளர ,அது  நமக்குச்  சரியான  பாதையையும்  மகிழ்ச்சியான  வாழ்வையும்  கனிகளாக  அளிக்கும்.

பழக்கங்களே  நம்மை  அடிமைப் படுத்துகின்றன. பழக்கங்களே  நம்மை  விடுவிக்கின்றன. எண்ணங்கள் தான்  முதலில் பிறக்கின்றன.பின்பு மெல்ல அவை செயல்களாக மாறி நிலைப்பெறும் பழக்கமாக உருவெடுக்கின்றன. எண்ணங்களை  மாற்றி  அமைத்தால்   அதைத்  தொடரும்  செயல்  தன்னாலேயே  மாறும். தீய  எண்ணங்களில்  உழன்றால்  அவை  மேலும்  மேலும்  நம்மை  இறுகப்பற்றி  அடிமை  வயப்படுத்தும். நல்  எண்ணங்கள்  பூத்துக்  குலுங்கினால்  அடிமை  விலங்குகள்  உடைக்கப்பட்டு  சுதந்திரமாய்  விரிவாகிக்  கொண்டே  இருக்கும்  எல்லைக்குள்  செல்ல முடியும்.

Share This Book