3

  1.  புறக்கண்ணில் தோன்றும்  உலகம்

 

வெளியில்  தோன்றும்   உலகமானது   உள்ளத்தில்  உலவும்  எண்ணங்களின்  வெளிப்பாடே . உள் உருவாகிய ஒன்றே வெளிப்படும். உள் இருப்பவை வெளியில் இருப்பவற்றுக்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கும். பரந்து   விரிந்தது   குறுகியதை தன்னுள்  அரவணைத்துக் கொள்ளும். பொருள் என்பது மனதின் மற்றொரு பகுதியாகும். எண்ணங்களின்  தொடர்க் கண்ணியே  சூழ்நிலைகளும்  பொருள்களும். சூழ்நிலைகள்  உருவாவதற்கு ,  ஏற்படுவதற்குத்  தேவையான  உந்து  சக்தியை  வழங்குவது  எண்ணங்களே. புறச்  சூழ்நிலைகளுக்கும்  உடன்  இருக்கும்  மனிதர்களின்  மனோ  பாவங்களுக்கும் ,  செயல்களுக்கும் , நடவடிக்கைகளுக்கும்  தன்னுள்  இருக்கும்  எண்ணங்களுக்கும்  நெருங்கிய  தொடர்புண்டு. அவனை  எல்லா  வகையிலும் செம்மைப்படுத்தவே  அவை   அவ்வாறு  அரங்கேறுகின்றன . மனிதன்   சூழ்நிலைகளிலிருந்து  விடுபட்டவன்  அல்ல.  அந்த  நிமிடம்  எந்தச்  சூழலில்   இருக்கிறானோ  அது  அவனுடைய  வளர்ச்சிக்கு  நேரிடையாகவோ  மறைமுகமாகவோ  உதவுகின்றது.  சூழ்நிலைகளுடன்  ஒன்று  கலந்த  அவன்  அதன்  ஒரு  பகுதி. இங்கே  சூழ்நிலை  என்பது  மனிதர்கள்,  பொருள்கள், சொற்கள், செயல்கள், மனோபாவங்கள்  என  அனைத்தையும்  குறிக்கின்றது. எண்ணங்களின்  அடிப்படை  விதியே,  கொண்ட  எண்ணங்கள்  வடிவம்  பெற ,  வளர்ச்சி  பெற,  ஆக வேண்டிய,  ஏற்பட வேண்டிய  சூழ்நிலையை  உருவாக்குவது  தான்.

 

 

கட்டுப்பாடற்ற  தன்னுடைய   எண்ணங்களும்  ஆசைகளும்  ஈடேற  தன்  சூழலை  ஒருவனால்  மாற்றிக்  கொள்ள  முடியாது. ஆனால், தன்  எண்ணங்களையும்   ஆசைகளையும்  கட்டுக்குள்  வைத்து  வழி நடத்திக்  கொள்ள  முடியும். பிறர்  மீது  தான்  கொண்டுள்ள  பார்வையை ,  மனோபாவத்தை , எண்ண  ஓட்டத்தை  மாற்றிக்  கொண்டால், திருத்திக் கொண்டால், பிறர்  அதற்கேற்ப  வேறொரு  புதிய பரிமாணத்தில்  தோற்றமளிப்பார்கள்.  பிறர்  தன்னுடன்  செயல்படும்  விதத்தை  ஒருவனால்  நிர்ணயம்  செய்ய முடியாது. ஆனால்  தான்  பிறருடன்  பணிபுரியும்  விதத்தை  நிர்ணயம்  செய்து  கொள்ள முடியும். தன்னுடைய  சூழ்நிலை  என்னும்  சுவரை  ஒருவனால்  உடைத்து  வெளியேற  முடியாது. ஆனால்  அந்தச்  சூழ்நிலைக்கு  ஏற்ப அவன்  தன்னைப்  பண்படுத்திக்  கொள்ள  முடியும். அல்லது  அந்தச்  சூழலில்  இருந்து  மீளும்  விதமாக  தன்  எண்ணங்களை  விரிவாக்கிக்  கொண்டால் , வேறு  திசையில்  செலுத்தினால்  புதியதொரு  சூழ்நிலை  அவனுக்கு  ஏற்படும்.

 

சூழல்கள்   எண்ணங்களைத்  தொடர்கின்றன.  எண்ணங்களை   மாற்றிக்  கொண்டால்  சூழல்கள்  அதன்  விளைவாக  புதிய  விதமாக  மாறும், தோன்றும். நேராக உள்ள  நிலைக்  கண்ணாடி  தன்   முன்  வரும்  பிம்பத்தை  அதே  போல்  பிரதிபலிக்கும்.  வளைந்தோ நெளிந்தோ உள்ள நிலைக்கண்ணாடி  சிறியதை  மிகைப்படுத்தியும்  நேராக  உள்ளதை  கோணலாகவும்  காட்டும்.  குழப்பமான மனது  காணும்  அனைத்திலும்  குழப்பத்தையே  காணும். மனம் ஒரு ஒழுங்கிற்கு கிழ்படிந்து தெளிவாக சாந்த நிலையில் இருக்கட்டும்.மனங்கள்  பளிங்கு போன்று  எவ்வித  மாசும்  படியாமல்  இருந்தால்  நீரலைகள்  அற்ற  எரிபோல்   விளங்கினால்  இவ்வுலகம்  பேரழகுடையதாகக்  காட்சி தரும்.

தன்னுடைய  மனம்  என்னும்  உலகத்தை ஆள்வதற்கு , கட்டுப் படுத்துவதற்கு , அதனை  பரிசுத்தமாக்குவதற்கு ,அதனை  சீரிய முறையில்  வழி  நடத்துவதற்கு  எல்லாவித  சக்தியும்  மனிதனிடம் வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் பிறர்  மனங்களை  ஆள்வதற்கோ , கட்டுப்படுத்துவதற்கோ, செல்வாக்கை  செலுத்துவதற்கோ, வழி நடத்துவதற்கோ அவனுக்கு  குறிப்பிட்ட  அளவில் மட்டுமே  சக்தி  அவனிடம்  தரப்பட்டுள்ளது.  அதுவும்  பிறர்  அனுமதித்தால் அன்றி  அதற்கும்  பயன்பாடு  இல்லை. தன்  வாழ்வைக்  கூர்ந்து கவனித்தால்  இந்த  உண்மையை  எளிதாக  விளங்கிக்  கொள்ளலாம். பல்வேறு  உயிர்களும்  பொருட்களும்  மனிதர்களும்  ஒரே  முழுமையின்  பல்வேறு கூறுகளே.  தானும்  இந்தப்  பிரபஞ்சத்தில்  ஓர்  இன்றியமையாத  உயிராக  இருப்பதை விளங்கிக்  கொள்வான். உயிர்கள்  ஒன்றை ஒன்று  சார்ந்தே  வாழ்கின்றன.  மற்ற  உயிர்களின்  பங்களிப்பு  ஒத்துழைப்பு  இல்லாமல்  எதனையும்  சாராமல் எதுவும்  தனித்து  வாழ முடியாது.

நம்  செயல்கள்  நம்  உடன்  வாழ்பவரைச் சென்று  அடைகின்றன. அவர்கள்  அதற்கு  ஏற்றவாறு  மறு செயல் புரிகிறார்கள். நாம்  செய்வது  அவர்களுக்கு  இடையூறாகத்  தோன்றினால்  அவர்கள் அதற்குத்  தகுந்தவாறு  பாதுகாப்பு  நடவடிக்கைகளை ,  முன் எச்சரிக்கைகளை  ஏற்படுத்துவார்கள். மனித  உடம்பானது  தேவையற்ற  கழிவுகளை  வெளியேற்றுவது  போல  முழு  மனித  சமூகம்  என்னும்  உடம்பானது  அதன்  தேவைக்குத்  துணை  புரியாதவற்றை  வெளியேற்றத்  துடிக்கும். உங்களது தவறான செயல்கள் ஒவ்வொன்றும் வாழும் இந்த பூமியின் எங்கோ ஒரு பகுதியில் ஒரு பாதிப்பை , ஒரு காயத்தை ஏற்படுத்தியுள்ளன அந்த பாதிப்பை நீக்குவதற்கு , காயத்தை ஆற்றுவதற்கு இயற்கை முயற்சிகின்றது. அந்த முயற்சியின் பின் விளைவாக வலியும் துன்பமும் உங்களைத் தொடர்கின்றன..

 

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.—————319

 

வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான். தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான்  என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அந்த இயற்கை விதியான -காரணங்களும் அதற்கு ஏற்ற விளைவுகளும் என்பது தனி மனிதனிடம் செயல் படுவதைப் போலவே முழு மனித சமுகத்திடமும்,   இந்த  முழு  பிரபஞ்சத்திடமும் செயல்படுகின்றது. [இந்த  முழு பிரபஞ்சமும்  ஒன்று கூடி  (விரும்பியோ, விரும்பாமலோ ) செய்த வினையின்  பயனை  அனுபவிக்கின்றது.]

எந்தச்  செயலும்  பொருட்படுத்தப் படாமல்  தள்ளி  வைக்கப்படுவது இல்லை. நீங்கள்  மிக  ரகசியமாகச்  செய்த செயலும்  முழுமையின்  ஒரு பகுதியாக  வந்து  அடைகின்றன . நல்  வினையாக  இருந்தால்  ஆனந்தத்தையும் , தீவினையாக  இருந்தால்  துக்கத்தையும்  ஏற்படுத்துகின்றன.   ஒவ்வொரு  எண்ணமும்  செயலும்  ஒரு  புத்தகத்தில்  பதிவு  செய்யப்பட்டு  தீர்ப்பளிக்கப் படுகின்றன. தீர்ப்புகள் வெகுமானங்களாக   தண்டனைகளாகத் திரும்புகிறது. இந்தக்  காரணத்தினால்  உங்கள்  செயல்களுக்கு  நீங்கள் மட்டும்  சொந்தம்  கொண்டாட  முடியாது.  அது  இந்த  முழு  மனித  இனத்திற்கும்,  முழு பிரபஞ்சத்திற்கும்  சொந்தமானது.

உங்களது  செயலைத்  தொடர்ந்து  ஏற்படும்  விளைவுகளை, சம்பவங்களை,  மற்றவர்களின்  எதிர்கொள்ளும்  விதத்தை  நீங்கள் தீர்மானிக்க  முடியாது. கட்டுப்படுத்த முடியாது. ஆனால்              உங்களது  அந்தச்  செயலின் ஆரம்பமும்  தொடர்வும்  முடிவும் உங்கள் கையில்  தான் உள்ளது.. சீரிய  முறையில்  தவறின்றி  முழு  மனத்தோடு  ஒன்றி  தீவிரமாக  செயலைத் செய்து  முடிக்கும்  ஆற்றலும்  சக்தியும்  உங்களிடம்  உள்ளது. தன்  கைக்கு  எட்டிய  செயலை  சரிவரச்  செய்வதே  ஒவ்வொருவருடைய  இன்றியமையாத  கடமையும்  சாதனையும்  ஆகும்.

புறத்தே  நிகழும்  சம்பவங்களால்  மற்றவர்களது  கருத்துகளையும் , பங்களிப்பையும்  உங்களால்  கட்டுப்படுத்த முடியாது  என்ற  உண்மையின்  மறு  பக்கம் மற்றவர்களது  கருத்தும்  பங்களிப்பும்  உங்களை கட்டுப்படுத்தவோ , காயப்படுத்தவோ  முடியாது. உங்களைக்  கட்டிப் போட்டுள்ள  சங்கிலிகளும், அதை உடைத்து எறிய கூடிய ஆற்றலும் உங்கள்  உள்ளே  தான்  இருக்கின்றன. பிறர்  மூலமாக  உங்களுக்கு  ஏற்படும்  காயங்களுக்கும்  வருத்தங்களுக்கும்  உண்மையான  காரணம் உங்களுடைய   மனோபாவமும் நீங்கள்  செய்த  செயல்களுமே  ஆகும். எய்தவன்  இருக்க அம்பை  நோக முடியுமா? அவர்கள் அம்பு போன்றவர்கள்.எய்தவர்கள்   நீங்கள் தான். காயப்படுபவர்களும்  நீங்கள் தான்.

விதி  என்பது வினையின்  பயன். வாழ்வின்  கனிகளை  இனிப்போ  புளிப்போ  ஒவ்வொருவனும்  தன்  வினைப் பயனுக்கேற்ப  பெற்றுக் கொள்கிறான்.  நெறி  தவறாதவன்  முழு  சுதந்திரத்தோடு  வாழ்கிறான். எவராலும் அவனை  காயப்படுத்தவோ  அவனை  அழிக்கவோ  அவன்  மன  நிம்மதியை  சீர்குலைக்கவோ முடியாது. அவன்  மற்றவர்களது  இயல்பை, சூழ்நிலையை  அறிந்து  பரந்த மனத்தோடு  எதிர் கொள்கிறான். மற்றவர்கள்  அவன் மீது  தீங்கு  இழைக்க  முற்படும்போது  அவர்களது  சக்தி முறியடிக்கப் படுகிறது . அவர்கள்  மேற்கொள்ளும்  முயற்சி அவனைத் தீண்டாமல்  அவர்களையே  திரும்பத்  தாக்குகிறது. அவனுள்  உறையும் , அவனில்  இருந்து  வெளிப்படும்  நன்மையே  அவனது  ஆதார   சக்தி  ஆகும். அவனது  ஆனந்தத்தை  அளிக்கும்  வற்றாத  ஊற்றாகும். சலனமற்ற  சாந்த  மனமே  அதன்  வேர். அதன்   மலரே  மகிழ்ச்சி .

ஒருவன் தன்னைக்  குறித்த  பிறரது  செயலில்    தீங்கை –  பாதிப்பை  காணும்போது  உதாரணத்திற்குப்  புறங் கூறுவது , அவர்கள்  புறங் கூறுவதால்   அவனது  மனோபாவத்தால்  அவன்  பாதிப்புக்கு  உள்ளாகின்றானேயன்றி  அவர்கள்  புறங் கூறியதால்  மட்டுமே  அவன் பாதிப்புக்கு  உள்ளாகி  விடுவதில்லை.. அவனது  மன  உளைச்சலும்  துக்கமும்  அவனுள்ளேயே  வேர்விட்டு  வளர்ந்தன. செயல்களின்  ஆற்றலையும்  தன்மையையும்  அவன்  இன்னும்  சரிவர  விளங்கிக்  கொள்ளவில்லை. தன்னைப் பற்றிப்  பிறர்  கூறும்  அவதூறானது  தனக்கு  ஒரு  நிரந்தரக்  களங்கத்தை  ஏற்படுத்தி  விடுமோ, தன்  குண  இயல்பை  அது மாற்றி  விடுமோ என  அஞ்சுகிறான். ஆனால்  புறம்  பேசியவர்களது  வார்த்தை  அவற்றை  சாதிப்பதற்கு  ஒரு  துளி  சக்தியையும்  பெற்றிருக்க வில்லை. அவை   உண்மையில்   புறம்  பேசியவர்கள்  குணத்தை  கீழே  இழுக்கவோ  அவர்களுக்கே  ஒரு  களங்கத்தை  ஏற்படுத்தவோதான்  சக்தி  பெற்றுள்ளன.

பிறர்  பேசும்  புறமானது  தன்னை  பாதித்து  விட்டதாக  எண்ணி  மனிதன்  ஆர்ப்பரிக்கிறான், துடிக்கிறான். புறங் கூறியவர்களுக்கு  தகுந்த  பதிலடியைத்  தருவதற்கு  பெருமுயற்சி  எடுக்கிறான். அவன்  இவ்வாறு  செய்கின்ற பெரு முயற்சியே   புறங் கூறப்பட்ட  வார்த்தைகளுக்கு  பலமளிக்கின்றது. உண்மையோ  என்கிற  தோற்றத்தை  அளிக்கின்றது. அவன்  மன  நிம்மதியை  இழந்ததற்கும்  அவன்  மனம்  ஆர்ப்பரிப்பதற்கும்  காரணம் அவன்  மீது  பிறர்  கூறிய  புறஞ்சொல்  அல்ல, அந்த  புறஞ்சொல்லை  அவன்  எதிர் கொண்ட  விதம் தான்.               நெறிகளை  கடைபிடிப்பவன்  இந்தக்  கூற்றின்  உண்மையை  நிரூபித்து  உள்ளான். அவன்  மீது  பிறர்  கூறும்  பழிச்சொல்  அவனுள்  எந்தக்  கலக்கத்தையும்  ஏற்படுத்துவதில்லை. அதனை  ஒரு  பொருட்டாக  அவன்  கருதவில்லை. அது  போன்ற  எண்ணங்கள்  அவன்  மனதுள்  எழுவதில்லை.  அது போன்ற  எண்ணங்கள்  உலாவும்  தளத்தை  அவன்  கடந்து  விட்டான்.  தன் மீது  பிறர் கூறிய   பழியை  தனக்கு  ஏற்பட்ட  களங்கமாக , அவதூறாக, தனது பெயருக்கு  மாசு  கற்பிக்கப்பட்டதாக  அவன்  எண்ணவில்லை. அறியாமையில்  உழல்பவர்களின்  செயலாகவே  அவன் இதை  கருதுகிறான். அந்தச்  செயலைத்  தன்னுள்  புகுவதற்கு  அனுமதிக்காததால்   அது ஏற்படுத்தக்கூடிய  பாதிப்புக்களிலிருந்தும்  விடுபடுகிறான். கற்களை  வீசி  கதிரவனை திசை  திருப்ப முடியாது. அதைப்  போலவே  வீண்  பழியை  அவன்  கருதுகிறான்.               இக்கருத்தை   வலியுறுத்தவே  புத்தர்  தன்  இறுதி  நாள் வரை  தன்  சீடர்களுக்குக்  கூறிய  அறிவுரை , “எவன் ஒருவன்  மனத்தில்  நான்  ஏமாற்றப்பட்டேன், நான்  அவமானப்பட்டேன் , நான்  அடிபட்டேன்  என்ற  எண்ணங்கள்  எழுகிறதோ  அவன்  இன்னும்  மெய்ப்பொருளை  உணரவில்லை ”   .

 

 

பிறரது   சொற்களையும்  செயல்களையும்  போன்றதே  புறத்தே  நிகழ்வன  யாவுமே .சந்தர்ப்பங்களும்  சூழ்நிலைகளும் , அவற்றை  உற்று  நோக்கினால்  அவை  நல்லதும் அல்ல ,கெட்டதும்   அல்ல.  நம்முடைய  உள்ளத் தெளிவாலும் , மனோபாவத்தாலும்  அவற்றை  நன்மையானதாகவோ  தீமையானதாகவோ  பாவித்துக் கொள்கிறோம். மனிதன்  தன்னுள் , தன்னால்  அரும்பெரும்  சாதனைகளை  செய்ய  முடியும், ஆனால்  தன்னுடைய சூழ்நிலை  அதற்கு  தடையாக  இருப்பதாக  எண்ணுகிறான். பணமும்  பதவியும் நேரமும்  இருந்தால் , குடும்ப வாழ்வில்  சிக்கல்கள்  இல்லாமலிருந்தால் , பெரும்  சாதனைகளை சாதிக்க முடியும் என்று கருதுகிறான் . ஆனால் இவை  எதுவுமே அவன் குறுக்கே  நிற்கவில்லை.

தன்  மனத்தில்  அவற்றிற்கு  உள்ள  அளவைவிட  பல  மடங்கு  சக்தி  இருப்பதாகக்  கருதுகிறான். அவற்றிற்கு  அவன்  அடிபணியவில்லை. அவற்றின்  மீது தான்  கொண்ட  கருத்திற்கு  தன்  பலவீனத்தால்  அடி  பணிகிறான் . சரியான  மனோபாவத்தை  கைக்கொள்ளாமல்  இருப்பதுதான்  அவனுக்குப்  பெரும்  தடையாக  இருக்கிறது. தன்னுடைய  சூழ்நிலையை  தன்னுடைய  முதலாக , மூலப்பொருளாக  ஏற்றால்; தடைக்கற்களை  எல்லாம்  படிக்கற்களாக  மாற்றினால் ; தன்  இன்றியமையாத தேவைகளே  அவன்  செல்ல வேண்டிய  பாதைக்கு  வழிகாட்டும் ;இடையூறுகள்   உதவிகளாக  மாறும்.  அனைத்துக்  கூறுகளையும்  விட  மனிதனே  அதி  முக்கியமானவன். அவன்  மனம்  தெளிவானதாக  கலக்கமின்றி  இயங்கினால்  தன்  சூழ்நிலை குறித்து  எவ்வித  முணுமுணுப்போ  சலிப்போ  இன்றி  அவற்றைக்  கடந்து  முன்னேறுவான்.தன்னுடைய  சூழ்நிலை  குறித்து  முணுமுணுப்பும்  சலிப்பும்  சோர்வும்  கொள்பவன்  ஒரு  முழு  மனிதனுக்குரிய  தன்மையை  அடையவில்லை. தேவைகள்   அவனைத்  தொடர்ந்து  துரத்திக்  கொண்டே  இருக்கும்.  அவன்  தன்  முழு  திறமையை ஆற்றலை பயன்படுத்தும்போது  அவை  அவனிடம்  அடி  பணிந்து  விடும். சூழ்நிலை  என்பது  பலவீனனுக்கு  ஒரு  கடுமையான  எஜமானன். வலிமை  மிகுந்தவனுக்கோ  பணிவான ஆற்றல்  மிகுந்த  வேலைக்காரன்.

 

வெளிச்  சூழ்நிலைகளோ  சம்பவங்களோ  நம்மை  சங்கிலியால்  கட்டிப் போடவோ  பிணைக்கவோ  இல்லை. அவை  குறித்து  நாம்  கொண்ட எண்ணங்களே   நம்மை  அவற்றோடு  பிணைக்கவோ  விடுவிக்கவோ செய்கின்றன .நாம்  உருவாக்கிய  சங்கிலிகளால்  நம்மைப்  பிணைத்துக்  கொண்டு  சிறைக் கதவுக்குள்  சென்று  கைதிகளாக  நம்மை  நாமே  மாற்றிக்  கொள்ளலாம்  அல்லது  சங்கிலிகளை  உடைத்தெறிந்து  மாளிகைகளை  உருவாக்கி  காற்றைப்  போல்  சுதந்திரத்தை  எல்லா  சூழ்நிலைச்  சம்பவங்களிலும்  அனுபவிக்கலாம். ”என்  சூழ்நிலைகள்  என்னைக்  கட்டுப்படுத்தும்   சக்தி  கொண்டவை  என்று  எண்ணினால் , அந்த  எண்ணம்  என்னைக்  கட்டிப் போடும். என்  வாழ்வாலும்  எண்ணத்தாலும்  அவற்றை  மீறி  என்னால்  வெளிவர  முடியும்  என்று  நினைத்தால்  அந்த  எண்ணமே  என்னை  விடுவித்துவிடும்”.                 ஒருவன்  தன்  எண்ணங்களைப்   பரிசோதித்துக் கொள்ள  வேண்டும். அவை  தன்னை   அடிமை வாழ்விற்கு இட்டுச் செல்கின்றதா   அல்லது  மீட்கின்றதா ? என்று உற்று நோக்கி தன்னை அடிமைப் படுத்தும் எண்ணங்களை விட்டொழித்து  விடுவிக்கும் எண்ணங்களை பின்பற்ற வேண்டும்.

 

பிற  மனிதர்கள் , பிறர்  கருத்துக்கள், வறுமை, துன்பங்கள் ,நன்பர்கள் விட்டு விலகுவது,பிறரின் ஆதரவு நீங்குவது  போன்ற   இவற்றைக்  கண்டு  நாம்  அஞ்சினால்  நாம்  அடிமை  வாழ்வில்  அகப்பட்டுள்ளோம். மெய்ப்பொருள்  உணர்ந்தவர்களது , நீதி  நேர்மை  வழுவாதவர்களது  நிலையான  மகிழ்ச்சியை  நாம்  உணர்ந்து  கொள்ள முடியாது.  நம்  எண்ணங்கள்  பரிசுத்தமாக  இருந்தால்  வாழ்வைக்  கண்டு எவ்விதமான  அச்சமும்  கலக்கமும்  கொள்ளாமல்  இருந்தால்  அனைத்தையும்  நம்  உதவிக்கு , முன்னேற்றத்துக்கு  வந்தவையாகக்  கருதி  சரியாக  அணுகினால் , நம்  வாழ்வின்  குறிக்கோளை  அடைந்தே தீருவோம் . அதனை  தடுக்கும்  சக்தி  எவற்றுக்கும்  கிடையாது..

 

Share This Book