2

  1. மனக்கண்ணில் தோன்றும்  எண்ணங்கள்

 

இன்பத்திற்கும்  துன்பத்திற்கும்  மனமே காரணம். அவற்றை. .உண்டாக்குவதும் வைத்துக்கொள்வதும் மனமே. அவை புறச்சூழ்நிலைகளால் உருவானவை அல்ல. உள் மனதின் பிரதிபலிப்பு. அவற்றிற்குக் காரணம் கடவுளோ  சாத்தானோ  சூழ்நிலையோ  அல்ல. எண்ணங்களே. எண்ணங்கள் ஊடுருவிய  செயல்களைத் தொடர்ந்து இன்பமோ துன்பமோ  மகிழ்ச்சியோ  துக்கமோ நம்மை வந்து அடைகிறது. செயல்கள் என்பது கண்களுக்கு தெரியும் எண்ணங்களின் உருவமே.மனத்தின்  வேரூன்றிய எண்ணங்கள் நம் குணத்தையும் பழக்க வழக்கங்களையும் தீர்மானிக்கின்றன. நம் பழக்க வழக்கங்களின் மூலமாக நாம் இன்பத்தையும் துன்பத்தையும் அறுவடை செய்கிறோம். தன்னுடைய வாழ்வின் சூழ்நிலையில் மாற்றங்களை விரும்புபவன், அதற்கு ஏற்றபடி தன் எண்ணங்களையும், மனப்பார்வையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய அன்றாட வாழ்வில் உள்ள தீய  பழக்கங்களிலிருந்த விடுபட்டு, வேரூன்றிய தீய எண்ணங்களைக் களைந்தால் துன்பத்தின்  காரணத்தை அறிந்து கொள்வான்.  நல்  எண்ணங்களை விதைத்து  நற்பழக்கங்களை வழக்கங்கள்  ஆக்கிக் கொண்டு இன்பத்தையும் மகிழ்ச்சியையும்  ஏற்படுத்திக் கொள்வான்.

ஒருவன்  தன் நலத்தை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் சக்தியை இழந்து விடுகிறான். பலரின், பலவற்றின் நலத்தை விரும்பி அடைய முற்படும்போது துக்கம் அவனை நெருங்க முடியாது. எங்கே தகுந்த காரணங்கள் இருக்கிறதோ அங்கே விளைவுகளும் காணப்படும். மனிதனால் விளைவுகளைக் கட்டுப்படுத்த  முடியாது. அவற்றின் மூலகாரணத்தை அறிந்து அதை மாற்ற முடியும். தீய எண்ணங்களை விட்டு விலகி உள்ளத்தைப் பரிசுத்தமாக்கி குணத்தால் மென்மேலும் உயரலாம்.தன்னை உயர்நிலைக்கு  தயார்படுத்திக் கொள்வது பேருவகை அளிக்கும் ஒரு தவமாகும்.

 

‘மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.’————34

 

 

 

ஒவ்வொரு  மனிதனும் தன்னுடைய எண்ணங்களாலே வளைக்கப்பட்டிருக்கிறான். அவற்றை அவன் பரந்து விரிந்ததாகச் செய்து தன்னை விடுவித்துக் கொள்ளலாம். குறுகியதாகச் செய்து  அதற்குள்  அகப்பட்டுக் கொள்ளலாம். இழிந்தவற்றைத்   துறந்து சிறந்தவற்றைப் பற்றிக்   கொள்ளலாம். வஞ்சகமான  எண்ணங்களை   நினைப்பிலே  இருந்து தூர எறிந்து  பேரானந்தமான  பேரன்பான  எண்ணங்களைப் போற்றலாம். இவற்றை  அவன் தொடர்ந்தால்  அழகும் ஆற்றலும் நிறைந்த   புதிய  தளத்தில்  பிரவேசிப்பான். பரிபூரணமான    உலகை  உணரத்  தொடங்குவான் .

.

மக்கள்  தங்கள்  எண்ணங்களின்  நிலைக்கு  ஏற்ப  கீழ்  நிலையிலோ  மேல்  நிலையிலோ  வாழ்கிறார்கள். இருள்  நிறைந்து குறுகியதாய் அல்லது  ஒளி மிகுந்து  பரந்து  விரிந்ததாய்க்  அந்த நிலை காணப்படுகிறது. காணும் அனைத்திலும் மனிதன்  தன்   எண்ணத்தின்  சாயலையே  காண்பான்.

 

சந்தேகமும் , பேராசையும் , பொறாமையும்  நிறைந்த     ஒரு  மனிதனை  எடுத்துக்  கொள்ளுங்கள். அவனிடம் தென்படும்  உலகம்  எந்தச்  சிறப்பும்  இன்றி சூதுவாது  நிறைந்து  காணப்படும்.  தன்னிடம்  எந்தச்  சிறப்பும்  நற்குணமும் இல்லாததால்  உலகிலும்  மற்றவரிடத்திலும்  எந்த சிறப்பையும் நற்குணத்தையும்  அவனால்  காண இயலாது.  தன்னுடைய கடவுளைக் கூட  அவனிடம்  இலஞ்சம்  பெற்று   அவனுக்குக்  காரியங்களை  சாதித்துக்  கொடுப்பவராக  எண்ணுகிறான்.எந்த உள்ளத்  தூய்மையையும்  கடவுளை     நாடுவதற்குத்   தேவையானதாக  அவன்  எண்ணவில்லை.  தன்னைப்  போலவே  மற்றவர்களும்  கேடுகெட்டவர்களாக அவன் பார்வை முடிவுகட்டுகிறது.மிகத்  தூய  தன்னலமற்ற  வார்த்தைகளிலும் செயல்களிலும்    களங்கத்தைக்  கற்பிக்கிறான்.

 

சந்தேகக் குணமில்லாத   பரந்த   மனமும்      தாராள             குணமும்  உடைய  மனிதனை  இப்பொழுது  கருதுங்கள். அவனது  உலகம்  எவ்வளவு ஆனந்தமாக  மகிழ்ச்சியாகக்  காட்சி அளிக்கிறது . அனைத்து  உயிர்களிலும்  மனிதர்களிலும்  ஒரு  தெய்வீகத்தைக்  காண்கிறான். அனைவரையும்  உண்மையாக  ஏற்கிறான். அவர்களும்  அவனிடத்து  உண்மையாகவே  நடந்து கொள்கிறார்கள். மிகக்  கொடியவர்களும் அவன்  முன்னிலையில்  தங்கள்  இயல்பை  மறந்து  ஒரு கணம்  அவனைப்  போலவே  மாறி விடுகிறார்கள். திடீர்  என்று  தங்களுக்குள்  நிகழ்ந்த  இந்த  மாற்றத்தை  எண்ணி வியந்து  தாங்களும்  மகிழ்ச்சியான  வாழ்வு  வாழ  வாய்ப்பு  இருப்பதை  எண்ணி  மகிழ்கிறார்கள்.

 

மேலே   குறிப்பிடப்பட்ட  சிறிய குணம் படைத்தவனும்,  பெரிய குணம்  படைத்தவனும்  இருவேறு  உலகில்   வாழ்கிறார்கள். அவர்கள்  அண்டை  வீட்டுக்காரர்களாக  இருந்தாலும்  அவர்களது  உணர்வலைகள்  முற்றிலும்  வேறு வேறான பாதையில்  செல்கின்றன.  இருவரது  செயல்களிலும் ஒற்றுமைகள்  அரிதாகக்கூட  காண  முடியாது.  சரி / தவறு   எனத்  தீர்மானிக்கும்  பார்வை முற்றிலும்  வேறுபடுகிறது. அவர்கள்  ஒரே  பொருளைப்  பார்த்தாலும்  அவை  இருவருக்கும்  வேறு வேறு  விதமாக  காட்சியளிக்கின்றன.

 

ஒருவன்  நரகத்தில்  வாழ்கிறான்.ஒருவன் சொர்க்கத்தில்  வாழ்கிறான்.இறப்பு  என்பது  அவர்களிடையே  காணப்படும்  இடைவெளியை  அதிகப்படுத்தி  விட முடியாது.ஒருவனுக்கோ  இந்த  உலகம்   என்பது  திருடர்களின்  கூடாரம்.  மற்றவனுக்கோ  அது  தேவதைகளின்  கோவில்.  ஒருவன்   தன்னிடமிருந்து  எவரும்   திருடிவிடக்  கூடாது , தன்னை ஏமாற்றிவிடக்  கூடாது  என்று  தன்  வசம்  எப்போதும்  ஒரு  கைத்துப்பாக்கியை  பாதுகாப்பிற்கு  வைத்துக்  கொள்கிறான்.( தன்னுடைய   உள்  மனத்தை  தான் தான் எப்போதும்  ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்  என்பதை  அறியாமல்.)  மற்றவனோ பேரழகையும் , பேராற்றலையும் , பேரறிவையும் , பேரின்பத்தையும்  அடையாளம்  கண்டு  வரவேற்கக் காத்திருக்கிறான்.  அவனது  நண்பர்கள்  உன்னதமானவர்கள்.  அவர்களும் அவனில் ஒரு     பகுதியே. அவனது  எண்ணங்களிலும்  உணர்விலும்  கலந்துள்ளனர்.  அவனது  உள்ளத்திலிருந்து  வெளிப்படும் பெருந்தன்மை வெள்ளத்தில்  எல்லோரும் நனைகின்றனர்.அவனைப்  போற்றுபவர்களின்  உள்ளங்களிலிருந்து  அது பல  மடங்காக  பெருகி மீண்டும்  அவனை  வந்து  அடைகிறது.

 

 

மனித  சமூகத்தில்  ஏற்றத்  தாழ்வுகள்  இருப்பதை மறுக்க முடியாது. அவர்களது   உள்ளங்களிலும்  நடைமுறை  வாழ்க்கையிலும்  பின்னிப்  பிணைந்துள்ள  எண்ணங்களும்   பழக்க   வழக்கங்களுமே  அவற்றிற்கு  காரணமாகும். சீர்த்திருத்தவாதி அந்த ஏற்ற தாழ்வுகளுக்கு

எதிராக  போர்க்குரலை  உயர்த்தலாம்.எண்ணங்களின் தன்மையால்  ஏற்பட்ட  ஏற்றத்தாழ்வினை அக்கூக்குரல்கள் சரி செய்து விட  முடியாது. எண்ணங்களை செயற்கையாக சமநிலைபடுத்த முடியாது.மேலோட்டமான எண்ணங்கள் வாழ்வின் தன்மையை மாற்றாது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக எழும் எண்ணங்களின் விளைவே வாழ்வின் அடிப்படையாகின்றது.

 

 

நீதீயைக்  கடைபிடிப்பவனும் ,  அநீதியைக்  கடைபிடிப்பவனும்  ஒரே நிலையில்  காணப்பட  முடியாது.அந்த  ஏற்றத் தாழ்வினை  காழ்ப்புணர்ச்சியோ   தற்பெருமையோ  ஏற்படுத்தவில்லை.வாழ்வின்  அஸ்திவாரத்திற்குத்   தேவையான அறிவும்  அறியாமையும்  நற்பண்புகளும்  தீய பண்புகளும் நன்மையையும் தீமையும்  ஆன  எண்ணங்களும்  பழக்கங்களுமே  காரணம். கொடியவர்களும் , நற்குணங்கள்  இல்லாதவர்களும்  மேன்மக்களின் வட்டத்தில்  நுழைய  முடியாததற்குக்  காரணம்  தங்களுடைய  மன இயல்பே.தன்  மன இயல்பை  அவன் படிப்படியாக  மாற்றி  பொறுமையாக  அவன் தன்னை  உயர்த்திக்  கொண்டால்  அவன்  இயற்கையாகவே  அவன்  தன  நிலையை  உயர்த்திக்  கொண்டு  மேன்மக்களில்  ஒருவனாகிவிடுவான். இதை விடுத்து செயற்கையான  வழியில்  ஒரு வழியில்  மிரட்டியோ,  இறைஞ்சியோ குறுக்குவழியிலோ  ஏதேனும் வழியில்  மேல்  நிலையை  அடைந்து  அங்கே  நிரந்தரமாக  வாழ முடியாது.

சொர்கத்தின் (நற்பண்புகளின்)  வாசல்  கதவை  வன்முறையால்  திறக்க முடியாது. நற்பண்புகளை      ஆராதிக்க  விரும்புபவனை  நற்பண்புகள்  தேடிச் சென்று  நண்பனாகக்  கொள்ளும்..  ஒரு  தீயவன்  தீய  செயல்களில்  ஈடுபடுபவர்களுடனேயே  நட்பு கொள்கிறான் .  மனிதர்கள் தங்கள் குணங்களுக்கு ஏற்ப ஒன்றை பிரதிபலிக்கும் கண்ணாடிகளே. எல்லா மனிதர்களும் , உலகையும் மற்ற மனிதர்களையும் நோக்கும் போது,தன்னை காண்பவனை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியையே காண்கின்றனர்.

 

 

ஒவ்வொரு   மனிதனும்   தன்னுடைய  குறுகிய  எண்ணங்களால்   சிறை   வைக்கப்பட்டுள்ளான்   அல்லது   பரந்து  விரிந்த  எண்ணங்களால்  விடுவிக்கப்பட்டுள்ளான் . அவனுடைய  எண்ணத்தின்  எல்லையை கடந்து  இருப்பவை  அவனைப்   பொறுத்தவரை   இல்லாதவைகளே.  அவற்றை  இருப்பதாக   உண்மையாக  அவனால்  ஏற்க  முடியாது. குறுகிய  எண்ணங்களுக்குள்   சிக்கியவன்  பரந்த  எண்ணங்  கொண்டவன்  மனதைப்  புரிந்து   கொள்ள  முடியாது.  படிப்படியாக  தன்னை  அர்ப்பணித்து  அந்த  நிலையை  அவன்  அடைய  முடியும்.  பரந்த  எண்ணங் கொண்டவன்  குறுகிய  எண்ணங்  கொண்டவனுக்கு  நேரக்கூடிய  மனநிலைகளையும்,  அனுபவங்களையும்  இம்மியளவும்  குறைவில்லாமல்  உள்ளவாறே  உணர்ந்து  கொள்ள முடியும்.அந்தக்  குறுகிய  எண்ணங்களைக்  கடந்து  மீண்டு  பரந்த  எல்லைக்குள்  வந்துள்ளதால்  அந்த  அனுபவங்கள் , மன நிலைகள்  அவனுள்  நிரந்தரமாகப்  பதிவாகியுள்ளன.தேய்பிறையில்  தொடங்கி  வளர்பிறையாகி  முழு நிலவு  ஆவது  போல  தன்னுடைய  எண்ணங்களைப்  பண்படுத்திக் கொண்டவன்  ஒரு  உயர்நிலையை நெருங்கும்போது  பழியையும்  பாவத்தையும்  எவர்  மீதும்  சுமத்தாமல்  நடப்பவை அனைத்தையும்  எந்த  சலனமுமின்றி  அவனால்  ஏற்க இயலும். தன்னுடைய  நிலையை  உயர்வாக  எண்ணுவதற்குப்  பதில் அவன்  மேலும், பல மடங்கு உயர்ந்த  சிகரங்களைக் கண்டு அந்த  சிகரங்களை நோக்கிப்  பயணத்தைத்  தொடங்குவதற்கு   தன்னை தயார்படுத்திக் கொள்வான்.

 

பல வகுப்புகளில்  படிக்கும்  சிறுவர்களைப்  போல  மனிதர்களும்  தங்களுடைய  புத்தி, ஞானம்  போன்றவற்றுக்கு  ஏற்ப  அதற்குத்  தகுந்த  நிலையில்  வாழ்கின்றனர். முதலாம்  வகுப்பு  படிக்கும்  சிறுவனுக்கு  ஆறாம்  வகுப்பு  படிக்கும்  சிறுவனின்  பாடங்களை  விளங்கிக்  கொள்ள முடியாது. அப்பாடங்கள்  அவனுடைய புரிந்து  கொள்ளும்  ஆற்றலுக்கு  வெகு  தூரத்திலிருக்கிறது. அவன்  படிப்படியாக ஒவ்வொரு  வகுப்பாக  படிக்க வேண்டிய பாடங்களை  படித்து  உணர்ந்து  ஆறாம்  வகுப்பை  அடையும்போது  அப்பாடங்கள் அவனுக்கு  எளிமையாக  இருக்கின்றன.

 

வாழ்க்கையிலும்  பல வகுப்புகள்  இருக்கின்றன. வகுப்புகளை  எல்லாம்  கடந்த  ஆசிரியர்கள்  இருக்கிறார்கள்.  பேராசை- சுயநலத்தால்  கேடு  கெட்ட செயல்களைச்  செய்பவர்களால்,  களங்கமற்ற  சலனமற்ற  தூய்மையான பேராழமான   உள்ளங்களையுடைய  தன்னலமற்றவர்களின்  செயல்களைப்  புரிந்து  கொள்ள  முடியாது.  உணர்ந்து கொள்ள  முடியாது. ஆனால்  நல்ல  செயல்களில்  தங்களை  ஈடுபடுத்திக்  கொண்டால் ,  நல்ல  எண்ணங்களுக்கு  தங்களுள்  இடமளித்தால், முயற்சியும்  தங்கள்  தவறுகளை  திருத்திக்  கொள்ளும் மனோபாவமும்  இருந்தால்  உயரிய  நிலையை  அடைய  முடியும்.  அந்த  நிலைகளுக்கும்  மேல், இவ்வுலகத்திற்கு  வழிகாட்டும்  பொருட்டு  துன்பக்கடலில் சுழலும்  உலகத்தைக்  கரை சேர்க்க,  மீட்டு  எடுக்க, புத்துயிர்  ஊட்ட சற்குருக்களும் ஞானிகளும்  இரட்சகர்களுமாகியவர்களை , புனிதர்களை,  இவ்வுலகத்தின்  பல  சமயங்களை  பின்பற்றுபவர்கள்  ஆராதிக்கிறார்கள்.   மாணவர்களிடையே  பல  வகுப்புகள்  இருப்பதைப் போல்  ஆசான்களிடையேயும்  பல  வகுப்புகள்  இருக்கின்றன. குருவினுடைய  சிம்மாசனத்தில்  அமர்ந்ததால்  ஒருவன் சிறந்த  குருவாகி  விட  முடியாது.  அவை  ஏதும்  இன்றி  தன்னுடைய  உள்ளத்தில்  உள்ள பேரன்பால்  பேரொளியால்  துன்பக்கடலில்  சிக்கியவரை  கரை  சேர்க்க  எண்ணுகின்ற  மனம்   மட்டுமல்ல, அதற்குரிய  நுட்பமும்  திறனும்  உள்ளவர்கள்  குருவாய்  வழிகாட்டி  உலகத்தை  உய்விப்பார்கள்.

ஒவ்வொரு  மனிதனும்  தன்னுடைய  எண்ணங்களுக்கு  ஏற்ப   உயர்வானவனாகவோ  தாழ்ந்தவனாகவோ  சான்றோனாகவோ  தரங்கெட்டவனாகவோ  இருக்கிறான். அவனது  நிலைக்கு  அவனது  எண்ணங்களே  இம்மியளவும் குறையாமல்  காரணங்களாக  உள்ளன. தன்னுடைய  எண்ணங்களால்  கட்டப்பட்டுள்ள  எல்லைச்  சுவருக்கு  உள்ளே  மட்டும் தான் அவனால்  உலாவ  முடியும்.  அதுதான்  அவனது  உலகம். அந்த  உலகத்திற்குரிய  பழக்கங்களை பழகிக்  கொள்கிறான்.அவன்  கொண்ட  எண்ணங்கள்  செயல்வடிவம் பெற  அவனது உலகம்  அவனுக்கு  எல்லா  வழிகளிலும்  ஒத்திசைவு  செய்கின்றது.  ஒருவனை  எவரும் கட்டாயப்படுத்தி  தாழ் நிலையில்  கொண்டு சேர்க்க  முடியாது. தன்  எண்ணங்களைப்  பண்படுத்தி  சிறகை  விரித்து  சிகரங்களை  அடையலாம்.தீயவற்றைப்  பற்றாமல்  உறுதியுடன்  அவற்றின்  பிடியை  உதறி, நன்மையைக்  கடைப்பிடித்து, குறுகிய எண்ணங்களை விட்டொழித்து  தன்  எண்ண  உலகை  பரந்து  விரிந்ததாக  மாற்றி  குளுமையான இதமான காற்றின் இடையே வானில் பறக்கலாம்..

Share This Book