8

  1.  வெற்றி உறுதியே : தோல்விக்கு அடிபணியாதே

 

தன்  மனத்தை  வெல்லும்  உன்னத பணியை   ஏற்றுக்  கொண்டவர்கள்,  எவ்வகையான  தீங்கிற்கும்  அடி பணிய மாட்டார்கள். நன்மை  ஒன்றிற்கே  அடி  பணிவார்கள்.  தீங்கிற்கு  அடி பணிவது  ஒரு  மிகத்  தாழ்வான  பலவீனம். நன்மைக்குத்  தலை வணங்குவது  மிகப்  பெரும்  வலிமையாகும். துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து, அறியாமையிலிருந்து, பாவங்களிலிருந்து, குற்றங்களிலிருந்து  மீள  முடியாமல்   அவற்றிற்கு  தலை  வணங்குவது  , ” நான்  கைவிடுகிறேன். நான்  தோல்வி  அடைந்து விட்டேன். வாழ்க்கை  தீங்கானது. நான்  அதற்கு  அடி பணிகிறேன் ” என்று  சொல்வதற்கு  ஒப்பாகும். இவ்வாறு  ஒதுங்குபவர்கள்  சமயங்களின்  சாராம்சத்தைப்  புரிந்து  கொள்ளாதவர்கள். நன்மையின்  மீது  அவர்களுக்கு  இருக்கும்  நம்பிக்கை  இன்மையை  நேரிடையாகக்  காண்பிக்கிறார்கள். தீமையை  இப்பிரபஞ்சத்திலேயே  மிகப்  பெரும்  சக்தி  நிறைந்ததாகக்  கருதுகிறார்கள்.அவ்வாறு  அடி பணிவது  அவர்களது  தன்னல  துக்ககர  வாழ்வைக்  காட்டுகின்றது. மனச்  சலனங்களுக்கு  எதிராக  தங்களது  துணிவின்மையைக்  காட்டுகின்றது. நன்மை  நிறைந்த  மனதின்  மகிழ்ச்சியையும்  அமைதியையும்  அவர்கள்  உணரும்  தன்மையற்று  விளங்குகிறார்கள்.

 

மனிதன்  தோல்வியும்  துக்கமும் அவனை தொடர்வதற்க்காக

உருவாக்கப்பட்டவன்  அல்ல. இறுதியாக அவைகளை  வென்று  மகிழ்ச்சியடைவதற்காகப்  படைக்கப்பட்டவன். இந்த  பிரபஞ்சத்தின்  எல்லா  ஆன்மீக  விதிகளும்  நன்மையை, நல்லவைகளை, நல்லவர்களைப்  பாதுகாக்கும்  அரண்களாகும். தீங்கிற்கு  எந்த  விதியும்  கிடையாது. அதன்  முழு  இயல்பே  துன்பத்தையும்  துக்கத்தையும்  வழங்குவதுதான்.

 

தீயக்  குணங்களின் விளைவை உணர்ந்து அவற்றை விலக்கி   நற்குணங்களை  வளர்த்துக்  கொள்வதற்குத்  தற்போதைய  கல்வி  முறையில்  மிக  மெல்லிய  நுண்ணிய  பாடங்கள்  ஏதும்  இல்லை. நம்  சமயத்  தலைவர்கள்  கூட  இவைகள்  குறித்த  ஞானமும்  அறிவும்  அனுபவமும்  இல்லாமல் போதிக்கும்  தன்மையின்றி  இருக்கிறார்கள். நீதி  நெறிகளைப்  பற்றிய  தெளிவு பெரும்பான்மையான  மனித  குலத்திற்கு , தங்களை  அறியாமல்  சுழலில்  சிக்கி , முட்டி மோதி,

மனகாயங்களாலும் போராட்டங்களாலுமே  கிடைக்கின்றது. ஒரு காலம் வரும். அப்போது  நற்பண்புகளை  நற்குணங்களை  வளர்த்துக்  கொள்வது  கல்வியின்  பகுதியாக    மாறும். அந்த  நாளில்   களங்கமற்ற  மனமும்  உள்ளத்தூய்மையுடன்  நீதிநெறிகளை  நெஞ்சில்  பதித்தவர்களே  போதனை செய்வார்கள். அவர்கள்  நற்குணங்கள் வளர்வதற்கு  சிறந்த  வழிமுறைகளைக்  வழங்குவார்கள். எதிர்கால  சமயங்களின்  கடமையும்  அதுவாகத்தான்  இருக்கும்.

தீங்கை,   தீமையை  மனிதனால்  வெல்ல முடியும். பாவங்களை  விலக்க முடியும். நன்மையை  நிரந்தரமாக  நெஞ்சில்  நிலைநிறுத்திக்  கொண்டு  ஆனந்தத்தையும்  நிம்மதியையும் அனுபவிக்க முடியும். சமயங்களையும்  மதங்களையும்  தோற்றுவித்தவர்களின்  முக்கிய  போதனை இதுதான். மெய்ஞானமில்லாதவர்கள்  இப்போதனைகளைத்  திரித்து  வேறுபடுத்தினாலும்  மெய்ஞ்ஞானம்  பெற்றவர்களின்  போதனை,  வரும்  காலங்களில்  மெய்ஞ்ஞானம்  பெறப்போகின்றவர்களின்  போதனை  அதுவாகத்தான்  இருக்கும். உண்மை  என்றும்  நிரந்தரமானது.

 

இந்தத்  தீயதை  வெல்வது  என்பது  புறத்தே  உள்ள தீயதைக்  குறித்து அல்ல . தீய மனிதர்களையோ , தீய  ஆவிகளையோ,  தீய  பொருட்களையோ  குறித்தும் அல்ல. உள்ளத்தில் உள்ள   தீய  எண்ணங்கள்,  தீய  ஆசைகள், தீய செயல்கள் போன்ற தீயதைக்  குறித்தே  ஆகும். எல்லா மனிதர்களும்  தங்கள்  இதயங்களி லிருந்து  தீயவைகளை  அழித்து விட்டால்  எவராலும்  எங்கேயும்  ” அங்கே  தீங்கு”  என்று  சுட்டிக் காட்ட முடியாது.  எல்லா  மனிதர்களும்  உள்ளத்தால்  நல்லவர்களாகி  இருக்கும் அந்தப்  பெருநாளில் தீமையின்  சுவடும்  பூமியிலிருந்து  அழிந்து போய்  இருக்கும். பாவங்களையும்  துக்கங்களையும்  எவரும்  என்ன வென்று   அறியாதிருப்பார்கள். பிரபஞ்சம்  முழுதும்  பேரானந்தமே என்றும்  நிறைந்திருக்கும்.

Share This Book